"அந்த ஜான் பிரிட்டோ வேற, நான் வேற.. அவதூறு பரப்புறாங்க..”- லீமா ரோஸ் சகோதரர் பேட்டி
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மீதான போதை பொருள் கடத்தல் வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பான செய்தியை திமுக ஐடி விங் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ, “நான் கோவையில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழில் நடத்துறேன். எனது சகோதரி லால்குடி சட்டமன்ற உறுப்பினர். போதைப் பொருள் கடத்தல் என எதிலும் நான் சம்பந்தப்படவில்லை. பெயர் மட்டுமே ஒன்று போல இருக்கிறது. வேறு எதிலும் நான் சம்பந்தப்படவில்லை.. என் மீது ஆதாரமின்றி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு..என் மீது லாட்டரி சம்பந்தப்பட்ட வழக்கு மட்டுமே உள்ளது.” என்றார்.
செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜான் பிரிட்டோ லீமா ரோசின் சகோதரர் என்கின்றனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள ஜான் பிரிட்டோ கொடுங்கையூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர். லீமா ரோஸின் சகோதரர் ஜான்பிரிட்டோ(57) கோவையை சேர்ந்தவர். பெயர் குழப்பத்தை பயன்படுத்தி அவதூறு கிளப்பப்படுகிறது. ஜான்பிரிட்டோ, லீமாரோஸ் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. ஆனால் போதைபொருள் கடத்தல் வழக்கு அவர் மீது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

