சுங்கச் சாவடி கொள்ளையைக் கண்டித்து போராட்டம்- ஜவாஹிருல்லா அறிவிப்பு

 
“திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம்”- ஜவாஹிருல்லா நம்பிக்கை

மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடி கொள்ளையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தவிருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாதெரிவித்துள்ளார்.

toll plaza

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது இதன் மூலம் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு சுங்கச் சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது. உதாரணமாக செங்கல்பட்டு  மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடி 2019 ஆம் ஆண்டில் காலாவதி ஆன நிலையில் இன்னும் கட்டண வசூலைத் தொடர்ந்து செய்கிறது. இது போன்று இன்னும் பல்வேறு சுங்கச் சாவடிகள் காலாவதியான நிலையிலும் கட்டணக் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் தினம்தோறும் ரூபாய் 50 கோடி சுங்க கட்டணமாக வசூல் கொள்ளை நடக்கிறது அதாவது ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி தமிழக மக்களுடைய பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 5 முதல் 7 விழுக்காடு உயர்த்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள், பேருந்து சுமையுந்து போன்ற கனரக வாகனங்களுக்கு மூன்று மாதம் ஒருமுறை சாலை வரி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாகனப் பதிவு, வாழ்நாள் வரி என ஆண்டுக்குச் சுமார் 7 ஆயிரம் கோடி தமிழ்நாட்டில் மட்டும் வரியாக வசூல் செய்யப்படுகிறது , இருப்பினும் சுங்கச்சாவடிக் கட்டணம் என்கிற பேரில் சாமானிய மக்களிடம் பெரும் பணம் கொள்ளை அடிக்கப்படுவது தொடர்கிறது. நான்கு வழிச் சாலை மட்டுமே இருக்கும் நிலையில் ஆறு வழிச் சாலைக்கான கட்டண வசூல் செய்வது, காலாவதி ஆன நிலையில் கட்டண வசூலைத் தொடர்ந்து செய்வது எனச் சுங்கச்சாவடி வசூல் என்கிற நிலையைத் தாண்டி அது சுங்கச் சாவடி கொள்ளையாக மாற்றம் கண்டிருக்கிறது.

jawahirullah

கேரளாவில் 1782 கி.மீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெறும் ஐந்து சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. 15,437 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால், 5,381 கி.மீ தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழகத்தில் 76 சுங்கச்சாவடிகள் உள்ளன.வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தமிழகத்தில் மேலும் பத்துச் சுங்க சாவடிகள் வரும் காலங்களில் அமைக்கப்படும் செய்தி இன்னும் நம் நிலைமையை மோசமாகிவிடும். அரசு நிர்ணயத்தை விதிகளின்படி பல சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ். விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணத்திற்கும் சிகிச்சைக்கும் வருவதற்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.

சுங்க கட்டண வசூல் மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தியத் தலைமை கணக்காயர் (சிஏஜி) அறிக்கை ஒன்றிய அரசின் மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆகவே காலாவதியான செங்கல்பட்டு பரணூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.  கேரளாவின் அளவுகோலைப் பயன்படுத்தி 9 சுங்கச் சாவடிகளைத் தவிர மற்ற அனைத்துச் சாவடிகளும் மூடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி வரும் செப்டம்பர் 16 திங்கள் அன்று மாலை 3 மணியளவில் ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்,வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம்மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம்   கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தும். அறவழியில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.