ஜெய் பீம் படக்காட்சி கள்ளக்குறிச்சியில் அரங்கேற்றம்! நரிக்குறவர்களுக்கு நடந்த கொடுமை

 
womens

கள்ளக்குறிச்சி அருகே காவல் துறையினர் விசாரணை என்ற அழைத்துச் செல்லப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 நபர்கள் 3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்று விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட நபர்கள் மீது பொய் வழக்குப் போடுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக நரிக்குறவ இன பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சின்னசேலத்தில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவரது கணவர் பிரகாஷ் மற்றும் அவரது வீட்டிற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் தர்மராஜ் மற்றும் செல்வம் ஆகிய மூவரையும் சீருடை அணியாத காவல்துறையினர் திடீரென இரவு நேரத்தில் வந்து வலுக்கட்டாயமாக விசாரணைக்கு வரும்படி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி, அச்சுறுத்தி வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் போலீசார் அழைத்துச் சென்றதாகவும் தனது கணவரை போலீஸார் அழைத்துச் சென்று மூன்று நாட்களாகியும் எங்கு வைத்துள்ளார்கள்? என்ன செய்தார்கள்? என்பது கூட தெரியவில்லை என்றும் புவனேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதேபோல் கொங்கராயபாளையத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி வேனில் ஏற்றிச் சென்றதாகவும் தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களும் எவ்வித குற்றமும் செய்யாமல் இதுபோல் அடிக்கடி போலீஸ்காரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அவர்களை அடித்து உதைத்து திருட்டு உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக் கொள்ள செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் கணவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள், அவர்களை காவல்துறையினர் ஏதேனும் துன்புறுத்தி தொடர்பில்லாத குற்றச் சம்பவங்களை ஒப்புக்கொள்ள செய்ய முயற்சிக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூலி வேலை செய்து அன்றாடம் பிழைப்பு நடத்திவரும் அவர்கள், தங்கள் உறவினர்களை விடுவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.