வெளியில் கடும் குளிர்... வீட்ல எல்லோருக்கும் சளி, இருமல் இருக்கா..? எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்காக..!

 
1 1

தற்போது காலை, மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் அபாயம் அதிகம் உள்ளது. மருந்துகள் இல்லாமல் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட விரும்பினால், ஆயுர்வேத மருந்துகளை பின்பற்றலாம். சளி, இருமலிலிருந்து விடுபட உதவும் சில ஆயுர்வேத வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.

இஞ்சி மற்றும் தேன் (Ginger, Honey)

இஞ்சி மற்றும் தேன் சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இவை இருமலிலிருந்து விரைவாக குணமடைய உதவுகின்றன. ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம். இதனால், இருமல், தொண்டைப்புண், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

உப்பு கொப்பளித்தல் (Gargle)

சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை குணப்படுத்த முதலில் வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கத் தொடங்குங்கள். இது தொண்டை வலியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தையும் குணப்படுத்தும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை வீக்கம் மற்றும் புண்களில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

நீராவி (Steam)

சளி மற்றும் இருமல் காரணமாக மக்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுகின்றது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. இதை சரி செய்ய வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது. வெந்நீரை உங்கள் முகத்திற்கு அருகில் வைத்து நீராவி எடுக்கவும். இது மூக்கு மற்றும் தொண்டையை சுத்தம் செய்து நிவாரணம் அளிக்கிறது.

மஞ்சள் பால் (Turmeric Milk)

மருந்தின்றி சளி, இருமலில் இருந்து விடுபட, மஞ்சள் கலந்த பாலை அருந்தத் தொடங்குங்கள். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது. ஒரு டம்ளர் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் சளி விரைவில் குணமாகும்.

துளசி மற்றும் இஞ்சி (Tulsi, Ginger)

சளியால் அவதியில் உள்ளவர்கள் முதலில் துளசி மற்றும் இஞ்சியை உட்கொள்ளத் தொடங்குங்கள். துளசியில் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசி இலை மற்றும் இஞ்சியை கஷாயம் செய்து குடிப்பதால் உடல் சூடாக இருப்பதோடு குளிர்ச்சியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

தேன் - எலுமிச்சை தண்ணீர்

இருமலை கூட சமாளித்து விடலாம். ஆனால் குழந்தைகளுக்கு இருமல் வந்தால் இரவு முழுவதும் வறட்டு இருமுலாக இருமி இருமி தொண்டையே புண்ணாகி விடும். அதுபோன்று இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.

இருமல் இருக்கும்போது காலையில் எழுந்ததும் தொண்டைக்கு இதமாக வெதுவெதுப்பான நீர் கொடுப்போம். வெறும் வெந்நீராகக் குடிக்காமல் அதோடு அரை எலுமிச்சை பழத்தின் சாறையும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து குடிக்க வேண்டும்.​எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். விரைவாக நோய்த் தொற்றுக்களை விரட்டும்.

அதேபோல தேனில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் தொற்றுக்களை சரிசெய்யும்.

சூப் கொடுக்கலாம்

அதிகமாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருக்கும் போது எதுவுமே சாப்பிட முடியாது. வாயெல்லாம் கசப்பாக இருக்கும்.அந்த சமயத்தில் மருத்துவர்கள் பெரும்பாலும் சூடாக சாப்பிடுவதே நல்லது என்பார்கள். ஆனாலும் கடினமான உணவுகளை சாப்பிடுவது ஜீரணத்தில் பிரச்சினை ஏற்படக் கூடும்.இதற்கு மிகச்சிறந்த தீர்வு என்னவென்றால் சூப் குடிப்பது தான். வெஜிடபிள் சூப், சிக்கன் சூப் எதுவாக வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

தொண்டைக்கு இதமான இருக்கும். தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழியும்.