எங்கள் ஆட்சியில் தான் குமரி கண்ணாடிப் பாலம் திட்டம் கொண்டு வரப்பட்டது - இபிஎஸ்..!

 
1

சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “குமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அந்தத் திட்டம் அவர் கொண்டு வந்தது இல்லை. அதிமுக ஆட்சியில், நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம். 2018-ல் மத்திய அமைச்சராக நிதின் கட்கரி இருந்தபோது, டெல்லியில் நடந்த கூட்டத்தில், இத்திட்டத்தை நான் தெரிவித்தேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி, எனவே திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கப் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

அந்தக் கோரிக்கையை ஏற்று சாகர் மாலா திட்டத்தின் கீழ், மத்திய மாநில அரசுகள் சரிபாதி நிதி உதவியுடன் அந்த திட்டம் வகுக்கப்பட்டது. பின்னர், நிதின் கட்கரி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக வந்த மன்சுக் மாண்டவியா சென்னை வந்தபோது, அவரிடம் நான் இந்த கோரிக்கையை வைத்தேன். திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெற்றோம். 2020-ல் கொரோனா காலக்கட்டம் என்பதால், அந்தப் பணி அப்படியே தடைபட்டுவிட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த இந்த ஸ்டாலின் மாடல் அரசு டெண்டர் விட்டு அந்தப் பணியை செய்திருக்கிறது. கண்ணாடிப் பாலம் திட்டம் கொண்டுவரப்பட்டது அதிமுக ஆட்சி” என்று இபிஎஸ் கூறினார்.