ஈபிஎஸ் உறவினர் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு

 
ஈபிஎஸ் உறவினர் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு

ஈரோட்டில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமான  கட்டுமான நிறுவனத்தில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிவடைந்தது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் N.ராமலிங்கம். ஈரோடு அருகே வேலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்த இவருக்கு சொந்தமான RCCL கன்ஸ்ட்ரக்சன்  நிறுவனம் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதன் இயக்குநர்களாக ராமலிங்கத்தின் மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ஈரோடு பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  கட்டுமான நிறுவனங்கள் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் அரசு துறை கட்டுமானங்களில் இந்த நிறுவனம் கால் பதித்து பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்த்தாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். சாலைப்பணிகள், கடல் சார் திட்டம், , மின் துறை ஒப்பந்நங்கள் கட்டுமானங்கள், என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள RCCL தலைமை அலுவலகத்திற்கு கோவையிலிருந்து இரண்டு கார்களில் வந்த வருமானவரித்துறையினர் கடந்த 7.ம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஈரோடு உட்பட 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.  ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள RCCL கட்டுமான நிறுவனம், அவரது வீடு மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் RPP கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வசுந்தரம் வீடு, முள்ளாம்பரப்பில் உள்ள RPP அலுவலகம் ஆகியவற்றில் 5 நாட்களாக வருமான வரிச்சோதனை நடந்தது. ராமலிங்கத்திற்கு தொடர்புடைய அம்மாபேட்டை அருகே பூனாச்சியில் உள்ள ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 7-ம் தேதி முதல் 5 நாட்களாக 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளனர்.