காலில் சுடு தண்ணீர் ஊற்றியதால் வேலைக்கார பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த ஐடி தம்பதி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பாலத்தின் கீழ் ட்ராவல் சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை கடந்த மாதம் மீட்டெடுத்த சங்ககிரி போலீசார், அந்த இளம்பெண்ணை கொலை செய்து கொண்டு வந்து வீசியதாக கணவர், மனைவி இருவரை கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தையொட்டி செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சிறிய பாலத்தின் கீழ் கடந்த மாதம் 30ம் தேதி துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்தனர். அவர் சங்ககிரி போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான DSP ராஜா, காவல் ஆய்வாளர்கள் காத்திகேயினி, பேபி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலத்திற்கு கீழ் டிராவல் சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 20 வயது முதல் 30 இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து சங்ககிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி அப்பகுதியில் வந்த கார்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக வாகனத்தை கொண்டு மேற்கொண்டது கார் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது.
விசாரணையில் டிராவல் சூட்கேஷில் இருந்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 15 வயதான சுமைனா என்பதும், அனாதை ஆசிரமத்தை சேர்ந்தவர் என்பதும், பெங்களூரு பாகணபள்ளி பகுதியில் வசிக்கும் அபினேஸ்சாகு (40) அஸ்வின்பட்டில் (37) தம்பதியினரின் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், வீட்டு வேலையின் போது சுடு நீர் எடுத்து செல்லும்பொழுது தவறி கீழே கொட்டியது. சுடுநீரானது அபினேஷ் சாகுல் காலில் பட்டதால் ஆத்திரமடைந்த அபினேஷ் சாகுல் அருகில் இருந்த கட்டையால் சுமைனாவை தலையில் தாக்கியதால் உயிரிழந்ததும், உடனடியாக டிராவல் சூட்கேஷில் அடைத்து வைத்து காரில் ஏற்றிக்கொண்டு பெங்களூருவிலிருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை எடுத்து பெங்களூருவில் இருந்து தலைமறைவான தம்பதியினர், வெவேறு மாநிலத்தில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் ஒரிசா சென்று குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சங்ககிரி போலீசார் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை தாக்கி கொலை செய்து டிராவல் சூட்கேஷில் அடைத்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிச்சென்ற வழக்கில் வெளிமாநில தம்பதியினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.