அதிமுக - தவெக கூட்டணி அமைகிறதா..?? அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி..!!
Oct 9, 2025, 08:47 IST1759979870218
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சிலரும் தங்களது ஏந்தி நின்றன. அப்போது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி.
இதோ பாருங்கள் “ தவெக கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க...” எழுச்சி.. ஆரவாரம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவிகளை துளைக்கும். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும்.
கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம். கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்” என்று கூறினார்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி கூறிய வார்த்தையால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணத்திலும் த.வெ.க. தொண்டர்கள் சிலர் தங்கள் கட்சிக்கொடியை ஏந்தி வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.


