தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு??.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..

 
முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.


 தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஒமைரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் குறையாததால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுபாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

lockdown

இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் ஊரடங்கு,  ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்களுக்கு தடை,  பள்ளிகளில் ஆன்லைன்  வகுப்பு,  கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.  இருப்பினும் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

temple lockdown

கொரோனா மற்றும் ஒமைரான் வைரஸ்  கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்,  கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் ஏற்கனவே அமலில் இருக்கும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.