இர்பான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்- மருத்துவமனைக்கு தடை
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபுட் ரிவ்யூ செய்து வரும் பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக ஹசீஃபா கர்ப்பமாக இருந்தபோது, இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார். அதன்பின் அண்மையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது மீண்டும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதா மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த சென்னை ரெயின்போ மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த ஊரக நலப்பணிகள் இயக்ககம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.