அதிமுக நிர்மல்குமாரை கைது செய்ய இடைக்கால தடை- ஐகோர்ட் அதிரடி
எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் பொய்யான தகவல்களை பதிவிடமாட்டேன் என அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது, சென்னை மெரினாவில் மழை நீர் காரணமாக மின் கசிவு ஏற்ப்பட்டதாக அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக நிர்மல் குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நிர்மல் குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, நிர்மல் குமார் தொடர்ந்து உறுதிபடுத்தபடாத தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறுதிபடுத்தபடாத தகவல்களை பதிவுகளை செய்யமாட்டேன் என ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்தும், தொடர்ந்து தவறான பதிவுகளை பதிவிட்டு வருவதாக தெரிவித்தார்.
நிர்மல்குமார் தரப்பில், தவறான தகவல் என்பது தெரிந்தவுடன் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என்றும், பொய்யான தகவல்களை பதிவிடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிர்மல்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை நிர்மல்குமாரை இடைக்காலமாக கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.