விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்- இண்டிகோ நிறுவனம்
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) மத்திய அரசு கொண்டு வந்தது.இதன்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 35 மணி நேரம், மாதத்துக்கு 125 மணி நேரம், ஆண்டுக்கு 1,000 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் எண்ணிக்கை இல்லாததால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும் வருகின்றன.
டெல்லி, மும்பை, ஹதராபாத் உள்ளிட்ட வடமாநில பயணிகள் 6 நாட்களாக சென்னையில் முடங்கியுள்ள நிலையில் எப்போது சீராகும், ஏன் உரிய முறையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் அன்லைன் மற்றும் மெயிலுக்கு பதில் இல்லை, நேரிலும் போதுமான ஆட்கள் பணியில் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும். சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்ரவரி 10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 750 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


