டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்..
மத்திய பட்ஜெட்டை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது. குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என பல கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனையடுத்து மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று ( ஜூலை 24) நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.
முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்றனர். இதில் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தங்கள் போராட்டத்தை தொடங்க இருக்கின்றனர்.