புதுச்சேரியில் 18-ம் தேதி முழு அடைப்பு : இந்தியா கூட்டணி அறிவிப்பு..!
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டு தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதன் பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிந்த பிறகு முன் தேதியிட்டு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதையடுத்து அன்று மாலையே, “200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மானியம் வழங்கப்படும்” என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் மற்றும் சிபிஐ(எம்எல்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கடசி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 18-ம் தேதி புதன்கிழமை இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது: “ஏழைகள், நடுத்தர மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி சுமையை ஏற்படுத்தியுள்ளனர். வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்திய அரசு, தொழிற்சாலைகளின் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே போராட்டம் நடத்தினோம். இந்நிலையில், கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக்கோரி வரும் 18ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். துணை மின் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு புதுவை மக்கள் ஆதரவு தர வேண்டும்” என்று வைத்திலிங்கம் கூறினார்.
திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், “மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2ம் தேதி பிரம்மாண்டமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக மின் கட்டணத்தை ஒப்பிட்டு மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஒரு அறிக்கை வெளியிட்டார். மோசடியாக மின் கட்டணத்தை குறைப்பது போல மானியம் வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டனர்.
மின் கட்டண உயர்வு புதுவை மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முன்னதாக, முழு அடைப்புப் போராட்டத்தை விளக்கி தொகுதிதோறும் பிரச்சாரம் செய்யப்படும். 18ம் தேதி தொகுதிதோறும் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டங்களை நடத்துவர்” என்று சிவா கூறினார்.