அதிகரித்த காற்று மாசு- புகைமண்டலமான சென்னை
சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டப்பட்டது. விண்ணை முட்டும் இசை முழக்கங்களுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர். இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகை காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.
நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றி இரவு 7 மணிக்கு மேல் ஒட்டுமொத்த பட்டாசுகளும் வெடிக்கப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது. ஒரே நேரத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்துவருவதால் சென்னை மாநகரம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சென்னைவாசிகள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு சென்ற காற்றின் தரக்குறியீடு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258 அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.