ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : கி.வீரமணி கண்டனம்!

 
k veeramani

ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

iit

சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இளநிலை, முதுநிலை என மொத்தம் 1,962 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது , அத்துடன் இதில் அதிகபட்சமாக 392 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். இவ்விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார். இவ்விழாவில்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. 

veeramani

இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்!முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ-  மதிக்கவோ IIT என்ற உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.