‘நீங்க ஒரு அடி வச்சா.. நாங்க 2 அடி வைப்போம் ’ - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதில்..
தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி பதில் அளித்துள்ளார்.
2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைவிட, முழு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ( ஆக.19) ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 11 புதிய ரயில் பாதைகளுக்கு என இடைக்கால பட்ஜெட்டில் ரூ.976.10 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், முழு பெட்ஜெட்டில் ரூ.301.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் 15 இரட்டைப் பாதையாக்கல், புதிய ரயில் வழித்தட திட்டங்கள், இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே கிடப்பில் உள்ள ரயில்வே பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் ரயில் நிலையம் அமைப்பது, அனைத்து வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு மெமு ரயில் இயக்குவது போன்ற பல பணிகளை விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், “ தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டிற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை யுபிஏ கூட்டாணி அரசு ஒதுக்கிய தொகையை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநில அரசின் விவகாரம். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Would like to bring the following facts to the notice of Hon'ble CM Thiru @mkstalin
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 19, 2024
NDA government has allocated a record amount of Rs 6,362 Crore for developing railways in Tamil Nadu.
This amount is more than 7 times the average allocation done in UPA era (only Rs 879 Crore… https://t.co/wLh86JREmN