இனி மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்கு பதிவு..!

 
1

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மருத்துவமனையின் தலைவருக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

முதலில் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.