வயநாட்டு மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்: பிரியங்கா காந்தி..!

 
1

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளா மாநிலம் வயநாடு மற்றும் அவரது தாய் சோனியா காந்தி எம்.பி.,யாக இருந்த உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி.யாக இருக்கிறார். இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலோடு வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் கட்சி அறிவித்தது. இதையடுத்து பிரியங்கா காந்தி கடந்த 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரியங்கா காந்தியுடன் தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில், வயநாட்டில் மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்குமே தவிர போராளியாக இருக்காது என்று வயநாடு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

வயநாடு மக்களுடனான பிணைப்பை ஆழப்படுத்த தனது பணி உதவும் என்றும், அவர்களுக்காக போராடவும், அவர்கள் விரும்பும் வழியில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளித்தார். மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது. ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும். உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.