எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்..இவருக்கு கொடுங்கள்... பாஜக எம்பி சுரேஷ் கோபி..!

 
1 1

நடிகர் சுரேஷ் கோபி கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது. திருச்சூர் தொகுதியில் தொகுதியில் போட்டியிட்ட அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேர்தலில் வென்ற அவருக்கு பிரதமர் மோடி ஆச்சரியமளிக்கும் வகையில் அமைச்சர் பதவி வழங்கினார். அதன்படி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலாத்துறையின் இணை அமைச்சராக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''பாஜகவில் மாநிலங்களவை உறுப்பினராக சதானந்தன் மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நான் கடந்த 2016 அக்டோபரில்தான் பாஜகவில் சேர்ந்தேன். அதனால், கேரள பாஜகவில் இளைய உறுப்பினர்களில் ஒருவராக உள்ளேன். மக்களவைத் தேர்தலின் போது மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிக்கும் வகையில் பாஜக என்னை மத்திய அமைச்சராக்கி இருக்கலாம். ஆனால் என்னுடைய திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு நான் ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை.

தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், சினிமாவில் தொடர்ந்து நடித்து சம்பாதித்து மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்தார். 2016 அக்டோபரில் கட்சியில் சேர்ந்ததாகவும், கேரளாவில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாஜக எம்.பி. தான் என்றும், தனக்கு பதிலாக சதானந்தன் மாஸ்டர் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் அவர் கூறினார்.

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான சதானந்தன் மாஸ்டர் அரசியலில் நேர்மையானவர். கடந்த 1994 ம் ஆண்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரால் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக அவர் தனது இரண்டு கால்களையும் இழந்தார். என்னைவிட மத்திய அமைச்சர் பதவிக்கு அவர் சிறந்த தேர்வாக இருப்பார்.

என்னை நீக்கி விட்டு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் மனதார கூறுகிறேன். இது, கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என நான் நம்புகிறேன். சதானந்தன் எம்.பி அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மேம்படுத்தப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்'' என்றும் தெரிவித்தார்.