ஒரே கட்டமாகவே நடத்த முடியல.. இதுல ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி? - காங். மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் கேள்வி..
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாதவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த முடியும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் இருந்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2014ம் ஆண்டுக்கு பின் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசியல் மொழி மோசமாக இருக்கிறது. அந்த மொழியில் யாரும் பேச மாட்டார்கள். நாக்கை துண்டிப்பேன். கொலை செய்து விடுவோம். இது போன்ற பேச்சுகள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு தெரியாது. காங்கிரஸ் கட்சிக்கு அரசியலில் தான் பா.ஜ.க. எதிரி. அரசியலில் பா.ஜ.க.வை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். இந்தியாவில் எதிரிகள் கிடையாது. எல்லாரும் இந்திய பிரஜை தான்.
தலித், இஸ்லாமியர்கள், பெண்கள், மலைவாழ் மக்களை பா.ஜ.க., எதிரியாக பார்க்கும். தமிழ் மொழியை கூட எதிரியாக பார்ப்பார்கள். ஒரே நாடு ஒரே மொழி. ஒரே நாடு ஒரே உணவு. ஒரே நாடு ஒரே மதம் என்பார்கள். ராகுல்காந்தி இது போன்றவற்றை எதிர்த்து போராடி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்த முடியாது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் ஒரே நாளில் நடத்தாமல் 4 கட்டமாக நடத்துகின்றனர். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க திசை திருப்புகின்றனர்” என்று அவர் கூறினார்.