திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன் – சீமான்..!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மாநில முதல்வராக இனி தலித் ஒருவர் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன். அதேசமயம் திமுக அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியதை நான் எதிர்க்கிறேன்.
துணை முதல்வராக ஆதிதமிழ் குடியை கொண்டு வரமுடியாதா? கல்வி அமைச்சராக ஆதிதிராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையை தவிர வேறெந்தத் துறையை கொடுத்துள்ளனர்? உங்க வீட்டுக்குள் இருந்துதான் துணை முதல்வர் வர வேண்டுமா? நாட்டுக்குள்ளே இருந்து வேறு யாரும் வரக்கூடாதா?
ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். ஆதிதமிழ் குடிகளை மதிப்பதற்குப் பதிலாக மிதிக்கும் கொடுமை இப்போது நடந்து வருகிறது. இதை சட்டம், திட்டத்தால் மாற்ற முடியாது. உளவியல் ரீதியாக மாற வேண்டும்,” என்று சீமான் கூறினார்.