குடும்பம் நடத்த வராத மனைவி கண்முன் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த கணவன்!

 
fire

பொள்ளாச்சியில் குடும்பம் தகராறு காரணமாக மனைவி கண் முன்னே கணவன், மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 13 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பம் நடத்த வருமாறு செல்வராஜ் அவ்வப்போது சுனிதாவிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார். 

இதனிடையே இன்று காலை சுனிதா பணியாற்றும் சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள மிக்சர் தயாரிக்கும் கடைக்கு சென்ற செல்வராஜ், மனைவியை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு அவர் மறுக்கவே, தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை மனைவி கண்முன்னே தனக்குத்தானே ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துக்கொண்டார். அதன்பின் செய்வதறியாது, அங்கிருந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். இதனால் அந்த ஆட்டோவும் தீப்பிடித்தது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கிழக்கு காவல் நிலைய போலீசார், மனைவி சுனிதாவிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.