கணவன் மனைவிக்கு ஒரே மாவட்டத்தில் கலெக்டர்- கூடுதல் கலெக்டர் பதவி..!

 
1

விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்தவர் பழனி. சமீபத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றத்தின் போது பழனியும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதாவது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் காலியான விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இடத்திற்கு ஷேக் அப்துல் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷேக் அப்துல் ரகுமான் நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற உள்ளார். இதேபோல் இவரது மனைவியான பத்மஜாவும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை கணவன் மனைவியான ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் பத்மஜா அலங்கரிக்க உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சித் துறை) இருந்த ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் என்பவர், தமிழக அரசின் மின் ஆளுமை முகமை கூடுதல் இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சித் துறை) பதவிக்கு பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார். பத்மஜா தமிழக அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.