உணவில் கிடந்த மனித பல்- தெனாவட்டாக பேசிய ஹோட்டல் ஓனர்.. கொந்தளித்த கஸ்டமர்..

 
ச்

சேலத்தில் ஹோட்டல் உணவில் மனிதனின் கடவாய் பல் கிடந்ததாக கூறி ஆட்டோ ஓட்டுனர் அளித்த புகார் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகர் 5 ரோடு சந்திப்பு பகுதியில் ராமசுப்பு என்பவர் அசோக் ஹோட்டல் என்னும் பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் இன்று மாலை , கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் என்பவர், அசோக் ஹோட்டலில்  சாப்பிட வந்தவர், புரோட்டா வாங்கினார். அப்போது புரோட்டாவுக்கு கொடுத்த சிக்கன் கிரேவியில்  மனிதனுடைய கடவாய்ப் பல் ஒன்று இருந்ததாக கூறி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவில் கிடந்ததாக கூறப்பட்ட பல்லை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட  கடையில் உணவு விற்பனையை தற்காலிகமாக நிறுத்தினர். 

இந்தநிலையில்  நாகராஜிக்கு வழங்கப்பட்ட  புரோட்டாவிற்கு கிரேவி ஏதும் வழங்கப்படாத நிலையில் , அவருடைய நண்பர்கள்  கிரேவியில் பல் கிடந்ததாக  கூறி , கடை உரிமையாளரிடம்  20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் பணம் தர மறுத்ததால் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையை அழைத்ததாகவும்  ஹோட்டல் உரிமையாளர் கூறினார். இந்த கும்பல் இதே போல தான் பல கடைகளில் பூச்சி கிடப்பதாகவும், புழு கிடைப்பதாகவும் பொய்யாக கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்ததாக புகார் அளித்துள்ளது எனவே இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.