'அரசியல் வாழ்க்கைக்கு அருகதையற்றவர்’... ஈவிகேஎஸ் இளங்கோவன் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்- ஹெச்.ராஜா
"அவர் பெண் அமைச்சர் ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது? என ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ““நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பிலிருக்கும் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பார்த்து, “ பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் இருந்தாலும் சரி, நமது தாய் நாட்டையும் தாய் நாட்டுப் பெண்களையும் தொடர்ந்து அவமதிப்பதும், அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வாடிக்கையாகிவிட்டது. பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் நாகரிகமின்றி விமர்சிப்பது உங்கள் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.
அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களான, நமது பாரதப் பிரதமரும், செல்வி. ஜெயலலிதா அம்மையாரும் சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்தி, தமிழக மக்களின் கடும் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டும் கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா? அதேபோல, கடந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த சேலம் மாநகராட்சி பெண் துணை மேயரை, “என்ன ரொம்ப அழகாயிட்ட வர” என்று துளியும் விவஸ்தையில்லாமல் பொதுவெளியில் மீண்டும் விமர்சித்தவர் தானே நீங்கள்? இன்று மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அமைச்சரைப் பற்றி சிறிதும் மாண்பற்ற விதத்தில் விமர்சிக்க துணிந்திருக்கும் உங்கள் குறுகிய சிந்தனை கடும் கண்டனத்திற்குரியது.
"அவர் பெண் அமைச்சர் ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது திரு. @EVKSElangovan அவர்களே?
— H Raja (@HRajaBJP) September 17, 2024
“நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக… pic.twitter.com/uvJmxQQkeY
இவ்வாறு, பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.