வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்..!
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கத்தை சேமிப்புத் தொகையாகவும், பரம்பரை வழி செல்வத்தின் அடையாளமாகவும் வைத்திருப்பது வழக்கமான ஒன்று. திருமணம், விழா, பிறந்தநாள் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கூட தங்க நகைகள் பரிசாக வழங்கப்படுவது இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கமாக உள்ளது.
ஆனால், இத்தகைய தங்கத்தை எவ்வளவு வீட்டில் வைத்திருக்கலாம்? வருமான வரி துறை இதற்காக எத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது குறித்து வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. வருமான வரித்துறை அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் ஒரு நபர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு எதுவும் இல்லை.
அதாவது, ஒருவர் பெற்றுள்ள தங்கத்தின் மூல ஆதாரத்தை ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால், அவர் எவ்வளவு அளவு தங்கம் வைத்திருந்தாலும் சட்டப்படி குற்றமாகாது. வாங்கிய தங்கத்திற்கு ரசீது, பரிசாக பெற்றதற்கு பரிசளிப்பு கடிதம் அல்லது பரம்பரை வழியாக வந்ததற்கு சான்றுகள் போன்ற சரியான ஆவணங்கள் இருந்தால் எந்த அளவிலான தங்கத்தையும் வீட்டில் வைத்திருக்கலாம்.
ஆனால், பலர் தங்கள் தங்கத்தின் மூல ஆதாரத்துக்கான ஆவணங்களை வைத்திருக்காமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டால் சந்தேகம் எழலாம். இதனால், வருமான வரித்துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, ஆவணங்கள் இல்லாத நிலையில் ‘‘பாதுகாப்பான அளவு’’ எனக் கருதப்படும் சில நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சம் 500 கிராமும் (அதாவது 62½ பவுன்), திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராமும் (அதாவது 31.25 பவுன்) மற்றும் திருமணமான, திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் (அதாவது 12½ பவுன்) தங்கம் வரை வைத்திருந்தால், அது ‘‘வழக்கமான குடும்ப நகைகள்’’ எனக் கருதப்பட்டு வருமான வரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படாது. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவு ஏற்று கொள்ளப்படும்.
இந்த அளவுகளுக்கு மேல் தங்கம் இருந்தாலும், அதன் வாங்கிய மூலத்தை நிரூபிக்க முடியுமானால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவில் தங்கம் வைத்திருந்தால், அது கணக்கிலிடப்படாத வருமானம் என கருதப்பட்டு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இத்துடன், தங்கத்தின் வகையான நகைகள், நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகிய அனைத்தும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
திருமண நகைகள், பரிசளிப்பு நகைகள் போன்றவற்றின் பதிவுகளை வைத்திருப்பது நல்லது. மொத்தத்தில் சொல்லப்போனால், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் அதன் மூல ஆதாரம் தெளிவாக, ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்.


