கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறையா?? - ஆட்சியர்கள் விளக்கம்..
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழையும் நாளை ( செவ்வாய் கிழமை) தொடங்கவுள்ளது. அத்துடன் இன்று வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக இரவு நேரங்களில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியது. கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. ஆனால் காலையில் மழை நின்றுவிட்டதால் மக்கள் வாழ்கையில் இடையூறு இல்லை என்பதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில தினங்களாகவே விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இருப்பினும்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்திருக்கிறார்.