“கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது”- இந்து சமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

 
Highcourt Highcourt

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Highcourt Says The temple is common to all, no caste can claim a  license for temples

சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில், கோவில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்ததபோது மனுதாரர் தரப்பில், கோவில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்ட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறி பல கோவில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில், கட்டுமானப் பணிகள் 7 கோடி ரூபாய் செலவில் 80 சதவீதம்  பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி  கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதேசமயம், அந்த கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு நவம்பர் 22 ம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டனர். மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.