விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு 13 பேர் பலி!

 
Rain

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,642 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலன நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. கண்டாச்சிபுரம் பகுதியில் மழை சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி விழுப்புரம் அடுத்த கொளத்தூர் பகுதியில் வீடு இடிந்து சேதம் அடைந்த ஐந்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.  

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கனமழை தொடர்வதால் மக்கள் தேவையில்லாமல்  வெளியே செல்ல வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள். மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 1,642 வீடுகள் சேதம் அடைந்து அதில் 1,132 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த கனமழைக்கு மாவட்டத்தில் 13 மனித உயிர்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது அவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணத்தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது 

87 கால்நடைகள் இறந்துள்ளது. அதில் 37 கால்நடைகளை இழந்தவர்களுக்கு தலா 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை சார்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைப்பட்டுள்ளனர்” என கூறினார்.