கனமழை எதிரொலி: 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 15 -ஆம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 3 தினங்களில் விலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16 - 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் எனவும், இதனால் வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று, ( அக்.15) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.