சென்னையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.
அதன்படி சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக கொளுத்தி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சென்ட்ரல், ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், கீழப்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், திருவான்மியூர்,மேற்கு மாம்பலம், மடிப்பாக்கம் என சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், போரூர், பூந்தமல்லி, மதுரவாயல் , அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 13.4 செ.மீ மழையும், வானகரத்தில் 12.6 செ.மீ மழையும், மணலியில் 12.4 செ.மீ, மழையும் பதிவாகியுள்ளது.