மாணவர்கள் வாயில் டேப்- தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் இடமாற்றம்
தஞ்சாவூரில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் பேசிக்கொண்டுருந்ததாக 5 மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியை மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து சக மாணவன் ராகவன் என்பவன் தான் டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியை இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தலைமையில் அப்பள்ளியில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் அய்யம்பட்டி பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்ஸி சுமாகுலேட் க்ரிஸ்டி மற்றும் முருகேஷ்வரி ஆகிய மூன்று பேரையும் வேறு பள்ளிகளுக்கு பணி இட மாற்றம் செய்துள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளார்.