200 ஏக்கர் கோயில் நிலங்களை தருமபுர ஆதினம் விற்றதாக புகார்- இந்து அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோவிலின் 200 ஏக்கர் விவசாய நிலங்களை தருமபுரம் ஆதினம் விற்றதாக அளிக்கப்பட்ட புகார் மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடு துறை மாவட்ட சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ சட்டநாத சாமி கோவில் என்ற சிவன் கோவில் உள்ளது. தேவராம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும்,சோழர் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவிலின் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களை குத்தகை விட்டு அதன் மூலம் தர்மபுரம் ஆதீனத்திற்கு வருவாய் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் சென்ற பின், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாய் ஆகும். அதே போல், சமீபத்தில் இக்கோவிலின் கண்காணிப்பாளர், தருமபுரம் ஆதினத்துடன் இணைந்து 8 ஏக்கர் நிலத்தை தனிநபர் மாற்றியுள்ளதை எதிர்த்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் கோவில் நிலத்தை மீட்க உத்தரவிடக் கோரி தமிழக இந்து சைவ கோவிகள் பாதுகாப்பு மற்றும் தெய்வநெறி பரப்பும் சங்கம் சார்பில் அதன் செயலாளர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, ஆஜராகி சீர்காழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சட்ட சுவாமி கோவிலின் நிலங்களை தனிநபருக்கு மாற்றிய தருமபுரம் ஆதினம், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, 6 வாரங்களில் மனுதாரரின் புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க இந்து அறிநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.