இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்- சீமான்
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956)-ஆம் நாள் தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956)-ஆம் நாள் தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை ஐயா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் ஐயா மா.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் போராட்டம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு, தமிழகம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகத்தின் விளைவாக சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் வந்த திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளான ஆடி 2 (18.07.21) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என கடும் எதிர்ப்பினை மீறி, வலிந்து அறிவித்தது. ஆனால், நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக பேரெழுச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐப்பசி 15 (01.11.2022) ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் முதன்மை நிகழ்வாக, தலைநகர் சென்னையில் வரலாறு காணாத மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை, ‘தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!’ எனும் உன்னத கொள்கை முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி நடத்தி காட்டியது.
தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். ஆகவே, உலகம் முழுக்கப் பரந்து வாழும் ஏறத்தாழ 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் தாய்நிலம் தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 ஆம் (01.11.2024) நாளான (நாளை) தமிழ்நாடு நாள் அன்று, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தத்தம் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு, நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்! மாலை சென்னை பெரம்பூரில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக ஒன்று கூடுவோம்! பெருமிதத்தோடு கொண்டாடுவோம்! அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.