மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா
மெட்ரோ பணிகளுக்காக சுமார் 21,000 கோடி நிதி இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தாமல் அதை வைத்து திமுக அரசியல் செய்து வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார் முதல்வர் ஸ்டாலின்! ஆனால், சென்னைக்கு ரூ.5000 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது.வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடனேயே தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்ட நிதிகளை தமிழக அரசு என்ன செய்தது?" என்று கடந்த ஏப்ரலில் நிதி அமைச்சர் கேட்ட பதில் கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை!
அதே போல் 'சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல், பிற மாநில மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது' என்று திமுக அரசினால் மீண்டும் அரங்கேற்றப்பட்ட சென்னை மெட்ரோ நாடகத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நிதி அமைச்சர்.. "மாநில அரசால் முன்னெடுத்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு பல்வேறு வழிகளில் 21,000 கோடி ரூபாய் நிதியை திரட்டி தந்தது. அதில் வெறும் 5880 கோடி மட்டுமே உபயோகம் செய்யப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 15,120 கோடி என்ன ஆனது?" என்று மீண்டும் உண்மையை உடைத்து கேள்வி எழுப்பியிருக்கிறார் மாண்புமிகு நிதி அமைச்சர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
— H Raja (@HRajaBJP) September 13, 2024
ஆனால், சென்னைக்கு ரூ.5000 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது.வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடனேயே தமிழகத்துக்கு ரூ.900 கோடி… https://t.co/uml0f5rJmE
இந்தக் கேள்விக்கும் நீங்கள் மௌனத்தை மட்டுமே மொழியாக முன்மொழிந்தால், நீங்கள் கூறுவதெல்லாம் பொய்யென்றே ஆகிறது என்கிறபட்சத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, மக்களை ஏமாற்றும் இத்தகைய மலிவு அரசியலை விட்டொழியுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.