தீபாவளி பரிசுப் பொருள் வாங்க அரசு நிதியை செலவு செய்யக்கூடாது- ஒன்றிய அரசு
புதுச்சேரியில் தீபாவளி பரிசுப்பொருட்கள் வாங்க அரசு நிதியை செலவு செய்யக்கூடாது என ஒன்றிய நிதியமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

புதுச்சேரியில் அரசியல்வாதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி முக்கியஸ்தர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். அதன்படி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் உள்பட உள்ள 33 எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சரவை செலவில் 'ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கி வந்தார். இதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 500 ஸ்வீட் பாக்ஸ், 500 பட்டாசு பாக்ஸ்களும் அமைச்சர்களுக்கு தலா 1,000 பாக்ஸ்களும் வழங்கப்பட்டன.
இந்த ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு வழங்கி வந்தனர். இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்வீட், பட்டாசுகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் செலவு துறை சார்பில் இணைச்செயலர் சிங் அலுவலக குறிப்பாணையை பல்வேறு துறைகள், யூனியன்பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதன் விவரம், அத்தியாவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்த நிதி அமைச்சக செலவுத்துறை அறிவுறுத்துல்கள் வெளியிடுகிறது. அதன்படி பொது நிதியை நியாயமான முறையில் பயன்படுத்துவது அவசியம். மத்திய அரசின் அமைச்சங்கள், துறைகள் மற்றும் பிற அமைப்புகளால் தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளுக்கு பரிசுகள், பொருட்கள் வாங்க எந்த செலவும் செய்யக்கூடாது இது உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


