சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது: மத்திய அரசு கண்டனம்..!

 
1

எக்ஸ், மெட்டா ஆகிய சமூக வலைதளங்கள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு காணொலி கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தது. கூட்டத்தின் போது, விமானங்களுக்கு அச்சுறுத்தல் செய்திகளை அனுப்பிய சில எக்ஸ் பக்க பயனர்களின் கணக்குகள் மற்றும் டொமைன் விவரங்களை டெல்லி போலீஸாரால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சமூக வலைதளங்களை மத்திய அரசு கடுமையாக சாடியது.

கடந்த எட்டு நாட்களாக சுமார் 95-க்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட ஆகாஸா, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாரா நிறுவனங்களின் விமானங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

இதனிடையே இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் எட்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறும்போது, “இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் பெயர் அறியமுடியாத கணக்குகளில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன. பின்பு அவை அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன. எக்ஸ் தளத்தில் உள்ள @adamlanza111, @psychotichuma மற்றும் @schizobomer777 ஆகிய மூன்று பயனர் கணக்குகளில் இருந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அக். 16-ம் தேதி எக்ஸ் தளத்தின் மூலம் பெங்களூருக்கு செல்லும் ஆகாசா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எக்ஸ் தளத்தில் கணக்குகளை உருவாக்கியவர் விபிஎன் (Virtual private network) அல்லது டார்க் வெப் பிரவுஸரைப் பயன்படுத்தி கணக்குகளை உருவாக்கி பின்பு ஒன்றுக்கும் அதிகமான கணக்குகளுக்கு அதை அனுப்பியுள்ளார்.” என்று தெரிவித்தார்.

விமான நிறுவனங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொள்வதற்காக புரளியைக் கிளப்புபவர்களை விமானங்களில் செல்ல தடை விதிப்பது உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.