பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும்- ஆளுநர் ரவி

சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் அவர்களின் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ரவி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “நமது பாரத கலாசாரத்தையும் அடையாளத்தையும் அழிக்க நமது சமூகத்தின் மீது இரண்டு விரோத வெளிப்புற சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றில் ஒன்று சித்தாந்தம், மற்றொன்று இறையியல். இந்த சக்திகளுக்கு முக்கிய இரையாகியது பின்தங்கிய சமூகம். தலித் சமூகத்தில் இருந்து வந்த சிறந்த நாயனார் துறவிகளில் ஒருவரும் கவிஞருமான நந்தனாரால் ஈர்க்கப்பட்டு, சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் அணித்திரட்டி நமது ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன கல்வி மூலம் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் பட்டியலின ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமர முடியவில்லை. சில இடங்களில் பட்டியலின மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும்” என்றார்.