"ரோந்து பணிக்கு செல்லும் போது துப்பாக்கியுடன் செல்லுங்கள்" - டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!!

 
ttn

திருச்சியில் திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் புகைப்படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு சைலேந்திர பாபு ஆறுதல் கூறினார்.  

ips

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வீரத்தோடும் விவேகத்தோடும் சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். ஆடு திருட்டில் ஈடுபட்ட 3 பேரை 15 கி.மீ துரத்தி சென்று பிடித்து ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ளார். சிறுவர்களுடைய பெற்றோருக்கு செல்போனில் அழைத்து 23 நிமிடங்கள் அறிவுரை கூறியுள்ளார். சட்டத்துறை அறிவுரைப்படி, சட்ட விதிப்படி செய்ய வேண்டியதை முறையாக செய்துள்ளார். சிறுவர்களைப் பொறுத்தவரை மிகவும் அன்போடு கவனத்தோடு காவல்துறை நடந்துகொள்கிறது என்பது இதன் வாயிலாக நமக்கு தெரிகிறது. போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும். கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது" என்றார்.

ttn

முன்னதாக திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த காவலர் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி மற்றும் 1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.