தமிழகத்தில் முதியோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

 
GK Vasan

சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் அலட்சியப் போக்கால் தொடர் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச்செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசு மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் தமிழ்நாட்டில் முதியோருக்கு பாதுப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது திருப்பூர்- பல்லடம் அருகே 3 பேரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட வீட்டில் இருந்த முதியவர் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, நகை பணத்தை கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளனர்.

gk vasan

இச்சம்பவம் தமிழகத்தில் முதியோர்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதால் தான் இது போன்ற தொடர் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல மாவட்டங்களில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, முதியோர் கொலை நடைபெற்று வருவதற்கு காரணம் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கில் கவனமின்மையே. இதற்கெல்லாம் அடித்தளம் டாஸ்மாக், போதைப்பொருள் கலாச்சாரம் தான். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.

இதற்காக தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சட்டம் ஒழுங்கின் அலட்சியத்தையேஎடுத்துக்காட்டுகிறது.தமிழக அரசு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிப்பதற்கும்,அவர்களுக்கு உரிய தண்டனை காலம் தாழ்த்தாமல் கிடைப்பதற்கும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.எனவே தமிழக அரசு முதியோர் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் சட்டம் ஒழுங்கு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.