ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 10 பேர் மீது குண்டர் சட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் ரவுடிகளை மறுவகை படுத்தப்பட்டு போலீசார் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் நான்கு மண்டலங்களில் டிஎஸ்பி தலைமையில் ரவுடிகள் கண்காணிப்பு குழுவை அமைத்து ரவுடிகளின் வழக்குகள் பொருளாதார நடவடிக்கைகள் உச்ச நடவடிக்கைகள் என பல்வேறு கோணங்களில் காவல்துறை கண்காணித்து வருகிறது. குறிப்பாக ரவுடிகளுக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகளை தடை செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற சென்னை காவல் ஆணையர் அருண், ரவுடிகளுக்கு எந்த மொழியில் புரியுமோ அந்த மொழியில் பதில் அளிப்பேன் என பதவியேற்ற உடன் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து தீவிரமாக கண்காணிக்கவும் ,குற்றச் செயல்களில் ஈடுபடாத வண்ணம் தடுப்பதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக நேரடியாக காவல்துறையினர் ரவுடிகள் இருக்கும் இடத்திற்கு சென்று ,தற்போது சரித்திர பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல் ரவுடிகளின் உறவினர்களிடம் , குற்றச் செயலில் ஈடுபடாத வண்ணம் இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். குறைந்த பட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில் வீடுகளுக்கு சென்று கண்காணித்து, எச்சரிக்கை விடும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. உண்மையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அருண் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்திரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் சென்னை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்