தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்- விரைவில் விஜய் அறிவிப்பார்: அமைச்சர் பேட்டி
தமிழகம் முழுவதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது, இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று , தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தமிழன் பார்த்திபன் இன்று அதிகாலை சேலம் வந்தார் . பின்னர் மேட்டூர் அருகே கொளத்தூருக்கு சென்ற அவர் கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பின்னர் சேலம் திரும்பினார். இந்தநிலையில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு வலது கையில் ஏற்பட்ட வலியின் காரணமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவருக்கு இசிசி , ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினர். பின்னர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரிடம் பல நோயாளிகள் அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கூறினர். அதனைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் மருத்துவமனைக்குள் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்ற அமைச்சர் தமிழன் பார்த்திபன் அங்கு உணவு அருந்தினார். அப்போது அங்கு வந்திருந்த நோயாளிகளின் உறவினர்களிடம் தரமான உணவு வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் ஆகியோர் அவர்களின் மருத்துவ தேவைக்கு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், எனக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட சிறிய விபத்தின் காரணமாக தோள்பட்டவில் வலி ஏற்பட்டது. தற்பொழுது வலி அதிக அளவில் உள்ளதால், அதற்காக தற்போது சிகிச்சை பெற வந்தேன் என்றார். தொடர்ந்து கூறிய அவர், இங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தினேன். நன்றாக இருந்தது. பசிக்கு என்றால் இது போதும் , மேலும் சுவை என்றால், இன்னும் கூடுதலாக ஒரு சில பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவர், இங்கு பராமரிப்பு நன்றாக உள்ளது என்றார். தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற திட்டத்திற்கான பணிகள் எப்போது வரும் என்ற கேள்விக்கு.... அதற்கான பணிகள், ஆலோசனைகள் நடந்து வருகிறது. விரைவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை அறிவிப்பார். போக்குவரத்து துறையில் என்னென்ன குறைகள் உள்ளதோ அத்தனையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். இது மக்களின் ஆட்சி , ஏழை எளிய மக்களுக்காகவே அமைக்கப்பட்ட ஆட்சி. அரசு மருத்துவமனை என்பது மக்களுக்கான மருத்துவமனை என்பதால் நானே வந்துள்ளேன்.அனைத்து வசதிகளும் உள்ளது. ஒரு சில குறைபாடுகள் இருந்தது , அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தேன் என்றார்.

