பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமற்றவை : எழும் கண்டனங்கள்..!

 
1

கோவையில் செல்வபுரம் மற்றும் செட்டி தெருவில் உள்ள கடைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய பல சைக்கிள்கள் (ஆண் மாடல் சைக்கிள்கள் ரூ.2,000-ரூ.2,300 வரையிலும்) (பெண் மாடல்கள் ரூ.1,800-ரூ.2,000 வரையிலும்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கடையின் உரிமையாளர் கூறியபோது, ​​சைக்கிள்கள் தரமில்லாதவை என்றும், மாணவர்களால் பழுதுபார்க்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாத நிலையில் அவற்றை விற்று விடுவதாகவும் தெரிவித்தார். “பல சைக்கிள்கள் சரியான வடிவத்தில் இல்லை. பிரேக்குகள் வேலை செய்யவில்லை மற்றும் சக்கர விளிம்பு வடிவம் இல்லாமல் இருப்பது, சிலவற்றில் டியூப்கள் கிழிந்தும், சிலவற்றில் சீட் கவர்கள் சரியாகப் பொருத்தப்படாதது, என சைக்கிள்கள் தரமற்ற நிலையில் உள்ளது. மாணவர்கள் முதலில் சைக்கிளை சரி செய்து பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். இதற்காக, அவர்கள் 500 – 700 ரூபாய் வரை செலவிட வேண்டும்,” என்றார்.

பலர் சைக்கிள்களை பழுதுபார்க்க முடியாமல் ரூ.800 முதல் ரூ.1,000 ரூபாய்க்கு அந்த சைக்கிள்களை விற்று விடுகின்றனர். அரசு தரமான சைக்கிள்களை வழங்கியிருந்தால், பெரும்பாலான மாணவர்கள் அவற்றை விற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றார்.

இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பதே விலையில்லா மிதிவண்டித் திட்டம் தான். அப்படி இருக்கையில் பள்ளியில் இலவசமாக வழங்கும் சைக்கிள்கள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளது வ்ருத்தமளிக்கிறது. இதனால் மாணவர்கள் சைக்கிளை ஓட்ட பயந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் அந்த சைக்கிளை நல்ல வியாபாரம் செய்து அவர்கள் பணம் சம்பாதித்து விடுகின்றனர், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் பள்ளியில், ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் நடந்தோ அல்லது பஸ்ஸிலோ தான் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.