வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை- 4 பேர் கைது

 
ம்

வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்துகளாக மாற்றி வாலிபர்களை குறி வைத்து விற்பனை செய்த 4 பேர் கைது செய்யபட்டனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் கடந்த 31 ம் தேதியன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து, அவர்களை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்களிடம் மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கடலூர் புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்த சபரிநாதன்(20), லட்சுமிபதி (20), சதீஷ் (20) என்பதும், அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர்களிடம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, அதனை சிரஞ்சி மூலம் உடலில் ஏற்றி போதையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 139 போதை மாத்திரைகள் மற்றும் 3 சிரஞ்சிகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் ஈரோட்டை சேர்ந்த கும்பலை பிடிக்க மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார், கைதான சபரிநாதன் உள்ளிட்ட 3 பேரும் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு சென்று போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த கண்ணன் (39), கருங்கப்பாளையத்தை சேர்ந்த சல்மான்கான் (29), பெருந்துறையை சேர்ந்த வினோத்குமார் (30), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கலைவாணி (42) ஆகியோர் இந்த மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கடலூர் அழைத்து வந்தனர். தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 2500 வலி நிவாரணி மாத்திரைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினி, 3 செல்போன், மோட்டார் சைக்கிள், 2 தின்னர் பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.