சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்...
இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3வது சுற்று போட்டிகள் செப்டம்பர் 14, 15ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டுகோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்றது. தொடர்ந்து இதன் 2-வது சுற்று போட்டிகள் சென்னை தீவுத்திடலில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் Street ரேசாக நடத்தப்பட்டன. தீவுத்திடலில் நடைபெற்ற இந்த இரண்டாவது சுற்று போட்டிகளை தமிழ்நாடு அரசு, SDAT மற்றும் RPPL நிறுவனங்கள் இணைந்து நடத்தின. தொடர்ந்து 3-வது சுற்று போட்டிகள் கோவையில் நடைபெறும் என்றும், 4 மற்றும் 5வது சுற்று போட்டிகள் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது RPPL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த 3-வது சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டுகோட்டை மெட்ராஸ் சர்வதேச கார்பந்தய ஓடுதளத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவா அல்லது கொல்கத்தாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த 4-வது சுற்று போட்டி கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், 5-வது சுற்று போட்டிகள் நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும்எனவும், பந்தயம் நடைபெறும் இடத்தை RPPL விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.