FORMULA 4 கார் பந்தயம்- FIA சான்றிதழ் பெறுவதற்கு 8 மணி வரை கால அவகாசம்
சென்னையில் FORMULA 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார் அமைப்பு ஆய்வை முடிக்கவில்லை. பந்தய சாலையில் ஆய்வுப் பணியை இன்னும் முடிக்காததால் பயிற்சிப் போட்டி தொடங்கவில்லை.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான FIA சான்றிதழை இரவு 8 மணிக்குள் பெற வேண்டும். இரவு 8 மணிக்குள் பெறத் தவறினால், போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும். FIA சான்றிதழ் இன்றி போட்டிகளை நடத்தக் கூடாது என தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
FIA அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று இரவு சென்னையில் ரேஸ் நடைபெறவிருக்கும் பகுதிகளில் பரிசோதனை செய்திருக்கின்றனர். இந்த பரிசோதனையின் முடிவில் FIA அமைப்பு திருப்தியடையவில்லை என தகவல் இப்போது கிடைத்திருக்கிறது.