கைதுக்கு பயந்து கணவரோடு தலைமறைவான முன்னாள் அமைச்சர் சரோஜா

 
saroja

பணமோசடி வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டாவது முறையாக நாமக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

A shocking complaint has been filed against a former ADMK Minister! | The  New Stuff

கடந்த ஆகஸ்டு 28- ஆம் தேதி ராசிபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சர் சரோஜா நீங்கள் சத்துணவு வேலைக்கு பணம் வாங்குங்கள். நான் தொகுதியில் வீடு கட்ட வேண்டும் என்று என்னையும் என் மனைவியும் அழைத்து கூறினார். அதன்பேரில் என் மனைவி மூலம் 15 நபரிடமிருந்து ரூ 76.50 லட்சம் பெற்று சரோஜாவிடமும் அவர் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்த பணத்தையும் கொடுத்துள்ளேன். அந்தப் பணத்தை வைத்துத்தான் தற்போது லோக ரஞ்சன் ராசிபுரத்தில் ஒரு வீட்டை கிரையம் செய்து இருக்கிறார். பின்னர் வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்ட சரோஜா, அவர் கணவர் லோக ரஞ்சன் அதற்குப் பிறகு திட்டமிட்டு எங்களை தவிர்த்தனர். இதுதொடர்பாக இரண்டுமுறை முன்னாள் அமைச்சரை நேரில் சந்திக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை. அப்போது தொடர்ந்து பேச முயன்ற போதுதான் உன்னை தொலைத்து விடுவேன், நான் அமைச்சராக இருந்தவர் என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும் என்று அவர் கணவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்தார். பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தரும்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டால் அதற்கு சரோஜாவும் அவர் கணவரும் அவரின் மருமகன் ராஜவர்மனும் தான் காரணம். எனவே முன்னாள் அமைச்சரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று குணசீலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில்  குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் சரோஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த மாதம்19-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது விசாரணையை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2-வது முறையாக விசாரணைக்கு வந்த முன்ஜாமீன் மனு வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும் ,அவரது கணவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.