அரசு பேருந்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

 
1

12 நாட்களுக்கு முன் பிறந்த  குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ் அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் பாண்டி செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் , அங்காலேஸ்வரி  ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருந்தார்.

கார் விபத்து

 வாடகை காரில் தங்கச்சிமடத்தை நோக்கி சனிக்கிழமை நள்ளிரவு உச்சிப்புளி அடுத்த பிரப்பன் வலசை அருகே வந்து கொண்டிருந்தனர். ராஜேஷ் சென்ற காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென பேருந்திற்குள் வாந்தி எடுத்தார். இதனால்  அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை நெடுஞ்சாலையில் நிறுத்தியுள்ளார். இதனால் அரசு பேருந்தின் பின் பகுதியில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ராஜேஷ் அவரது மகன்களான  தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள்  செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனர்  சவரி பிரிட்டோ  , ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை  மூவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆம்புலன்ஸ்


அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள்  படுகாயமடைந்த மூவரையும் மீட்டு  சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த 5  பேரின் உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 2  குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது