மீனவர் கைது - இலங்கை அதிபருக்கு முதல்வர் கோரிக்கை

 
mkstalin

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

படம்

பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வாழ்வாதார கவலைகளை கருத்தில் கொண்டு, அவற்றை மனிதாபிமான முறையில் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்கள் ஈடுபாட்டைத் தொடருமாறு அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதேபோல் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துதல், காரைநகர் படகுத்துறையை புனரமைத்தல், இந்திய உதவியின் மூலம் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இலங்கையின் மீன்பிடித் துறையின் நிலையான வளர்ச்சிக்காக இந்தியா முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு இலங்கை அதிபர் திசநாயக நன்றி தெரிவித்தார்.

படம்

பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்து பேசியதைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை அதிபர்  அனுர குமார திசநாயக்கே அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மனிதநேயத்தின் அடிப்படையிலும் அமைதி வழியிலும் தீர்வுகாண்பது குறித்தும், மோதலைத் தவிர்ப்பதை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நிகழ்த்தியது வரவேற்கத்தக்கது.


இந்நிலையில், மாண்புமிகு அனுர குமார திசநாயக்கே அவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வதையும், பிடித்து வைத்துள்ள அவர்களது படகுகளை விடுவிப்பதையும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கை இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை விதைப்பதுடன், நமது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுக்கும் அமைதியான எதிர்காலத்துக்கும் வழிவகுப்பதில் ஆக்கப்பூர்வமான நகர்வாக அமையும்.” எனக் கேட்டுக்கொண்டார்.